[உபுண்டு தமிழகம்]தேசிய அளவிலான கட்டற்ற மென்பொருள் மாநாடு - கொச்சின்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sun Nov 16 15:21:20 GMT 2008


கேரள மாநிலம் கொச்சின் - அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த
இரண்டு நாட்களாக (நவம்பர் 15, 16) தேசிய அளவிலான கட்டற்ற மென்பொருள்
மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டேன். சித்தார்த், பவன், அருண், பரணி,  ராஜசேகர், பாலாஜி என
கிட்டத்தட்ட பதினைந்து பேர் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டோம்.
நிகழ்ச்சிக்கு ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் தொலைவிலிருந்து திரையில் தோன்றி
வாழ்த்துரை வழங்கினார். கேரள கல்வியமைச்சர் திரு. பேபி மாநாட்டை துவக்கி
வைக்க, பல்கலைக்கழக துணைவேந்தர் கங்கன் பிரதாப் தலைமை வகித்தார்.

பல்வேறு தலைப்புகளில் விவாதங்களுக்கும், செய்முறை வகுப்புகளுக்கும்
ஏற்பாடாகியிருந்தன. லோகலைசேஷன் - இன்டர்நேஷலைசேஷன் எனும் தலைப்பில்
தில்லி கோரா மொகந்தி, சுகந்திர மலையாளக் கணிமை ஷ்யாம் ஆகியோருடன் இணைந்து
ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டற்ற கணிமைச் சூழலில் இந்திய
மொழிகளுக்காக இதுவரை  நடைபெற்ற பணிகள் மற்றும் இனி
நடைபெறவேண்டியிருக்கும் பணிகள் போன்ற விடயங்களை அலசினோம். இன்டுலினக்ஸ்
திட்டத்தின் முறையான அடுத்த சந்திப்பு வரும் 2009 ஜனவரி மாதத்தில்
நடைபெறலாம். விவரங்கள் கிடைக்கப்பெற்றதும் பகிர்ந்து கொள்கிறோம்.

தொழில் முனைவோருக்கான ஒரு கூடுதலிலும் கலந்து கொண்டு கேரளத்தில் கட்டற்ற
மென்பொருளை மட்டும் சார்ந்து வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அனூப் ஜான்
உள்ளிட்டோரது அனுபவங்களையும் கேட்க முடிந்தது. மாலை 'உலக பொருளாதார
சிக்கலும் ஐடி தொழிலும்' எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கமும் நடைபெற்றது.
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு. சீத்தாராம் யெச்சூரி, கேப்ஜெமினி
நிறுவன வழிகாட்டி பொறுப்பில் இருக்கும் திரு. ஆஞ்சன் பேனர்ஜி ஆகியோர் உரை
நிகழ்த்தினர்.

கேளரத்துக்கே உரிய மோகினியாட்டம், கதக்களி, பரதம் போன்ற கலை
நிகழச்சிகளுக்கும் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன. மடலாடற்
குழுவிலேயே பெரும்பாலும் அறிந்து வந்துள்ள பலரையும் நேரடியாக சந்திக்கும்
ஒரு வாய்ப்பினை இந்நிகழச்சி அமைத்துத் தந்தது.

நிகழச்சியை ஒருங்கிணைத்து நடத்த உழைத்த அத்துனை பேருக்கும்
பாராட்டுக்கள். நல்லதொரு உபசரிப்பும் சுவையான கேரள உணவும்
விருந்தோம்பலும் பசுமையான சூழலும் நினைவில் நீடித்து நிற்கப்
போகிறதென்றால் அது மிகையாகாது.

இரண்டாவது நாள் நிகழச்சியில் கலந்து கொண்டோரிருப்பின் தங்கள் அனுபவங்களை
இத்தறியில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளலாம்.

--
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list