[உபுண்டு தமிழகம்]பரவைப் பறந்து…

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Wed Dec 5 13:39:37 GMT 2007


சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் வழியில் நடு நிசியில் நாலு முறை இறக்கி
விட்டுப் பைகளைக் களைந்து சோதனையிட்டப்பின் தொடர்ந்து செல் எனச் சொன்னால்
தங்களுக்கு எப்படி இருக்கும்?

தன்விடுதலைக்காக இன்னுயிரீயத் துணியும் மலையொத்த மாவீரம் வாழும் நாட்டில்
இவையெல்லாம் மடுவினும் குறைந்து மண்ணிலும் சிறிதென நினைத்துக் கொண்டே
மென்விடுதலையைப் பறைசாற்றப் போயிருந்தோம் இலங்கைக்கு, அனுதினமும் இவ்விடர்
படும் மக்களைப் பற்றியச் சிந்தனை ஒரு புறமிருக்க.

கொழும்பு நகரிலிருந்து பத்துமணித் தியாலத்துக்கும் குறைவானப் பயணம். கண்டி
அம்பாறையெல்லாம் கடந்து நிற்கும் சம்மாந்துறை. சற்றே புறந்தள்ளி இருக்கும்
ஒலுவில் எனும் ஊரிலமைந்திருக்கும் தென்கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகத்தின்
கணினிக் கிளையிருக்கும் துறை.

திசம்பர் திங்கள் முதல் நாள் வைகறையில் அப்பல்கலைக் கழக விருந்தினர் விடுதியில்
வந்திறங்கி காலைச் சிற்றுண்டியினை முடித்து விட்டு, பயிலகத்துக்கு விரைந்தோம்.

முந்தைய தினமே சகாக்கள் சிலரது துணையுடன் முன்னேற்பாடுகளைக் கவனித்திருந்தார்
மயூரன் <http://tamilgnu.blogspot.com/>. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்,
ஒருங்கிணைப் பாளர்கள் என அனைவரிடமும் சிறியதொரு அறிமுகத்துக்குப் பின் பட்டறைத்
துவங்கியது.

முறையான துவக்கத்துக்குப் பின் முதலுரையாற்ற வந்தவர் புத்த முனி மெத்த விகாரி.
பின்னொரு கேள்விக்கு அவரளித்த உரையில் குனு/ லினக்ஸினைத் தாம் பாவிக்கக்
காரணமாக கூறியக் காரணங்கள் இரண்டு.

அவரோ பிச்சை எடுத்து வாழும் பௌத்த பிக்கு. சமயத் தேவைகளின் பொருட்டு தாம் கணினி
பாவிக்க முற்பட்டபோது கிடைத்த இயங்கு தளத்தின் விலை, துறவியொருவரின்
தீண்டுதலுக்கு மிகத் தொலைவிலிருந்ததாம்.

மீறிப் பிறருதவிப் பெற்று வாங்கிக் கொண்டாலும், பற்றற்று இருக்கும் தம்மிடம்
வட்டின் நகலொன்றை எமக்கு கொடுங்கள் என யாராவது வினவினால், உரிமம் சொல்லும்
காரணத்தினால் பகிர்ந்து கொள்ள இயலாது எனப் பகறும் நிலை.

பற்றற்றவன் பகிர்ந்து கொள்ளாது இருத்தல் ஆகுமா? பற்றற்றவன் உரிமைக் கோரும்
ஒன்றும் இருத்தல் தகுமா? இயலாது! கூடாது! அது அறத்துக்கும் ஒவ்வாது! எனும்
முடிவு கொண்டு முதன் முதலாக ஸ்லாக்வேர் (http://www.slackware.com/) பாவிக்கத்
துவங்கினாராம்.

அனுபவம் தொடரும்…

பி.கு: பரவை - கடல். இலங்கையில் பழக்கத்திலுள்ள சொற்களும் பயன்படுத்தப்
பட்டுள்ளன. கண்டுபிடிங்க பார்க்கலாம் [image: ;-)]

நிழற்படங்களுக்கு: http://amachu.net/kadambam/main.php?g2_itemId=89
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20071205/2c79ade1/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list