[உபுண்டு_தமிழ்]உங்கள் கணிநுட்ப படைப்புகள் வரவேற்கப்படுகின்றன - கணிமொழி
ம. ஸ்ரீ ராமதாஸ்
amachu at ubuntu.com
Wed Apr 2 03:01:08 BST 2008
அறிமுகம்
கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக்
கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம்
உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ்
பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும்
மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள். இரண்டாவது உருவாக்குபவருக்கே உரித்தான
தனியுரிம மென்பொருள். இவ்விரண்டினுள் கட்டற்ற மென்பொருள் உலகின் விடயங்களை
மொழிய விழையும் முயற்சி கணிமொழி.
இலக்குகள்
- கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விடயங்கள் துவங்கி அதிநுட்ப விடயங்களையும்
அறிந்திட விழையும் ஒருவருக்கு வேண்டிய தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய்
உருபெறுவது.
- உரை, ஒலி, ஒளி என இயன்ற ஊடக வகைகளில் படைப்புகளை ஊக்குவிப்பது.
- குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்துறையில் நிகழ்பவற்றை எடுத்துரைப்பது.
தற்போதைய இலக்கு ஒரு மாத கால இடைவெளி.
- எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது.
- அச்சுப் பிரதிகள் இட்டும் விநியோகிக்கப்படும். (சிறிய அளவில் துவங்க
உத்தேசம்.)
- தங்கள் பகுதியில் அச்சிட்டு விநியோகிப்பது அதிக பலனைத் தருமாயின்
அங்ஙனம் செய்ய முனைந்து முயற்சிகள் மேற்கொள்ளவும்.
- விவரங்கள் வளர வளர அவற்றை புத்தகங்களாகவும் வட்டுக்கள் உள்ளிட்ட ஏனைய
சேமிப்பு ஊடகங்களின் வாயிலாகவும் வெளியிடுவது.
பங்களிக்க
- விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
- கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த விடயமாக இருத்தல் வேண்டும்.
- பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம்.
உதாரணத்திற்கு காபிலெப்ட்<http://www.gnu.org/copyleft/copyleft.ta.html>
.
- தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே
பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
- கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு
கற்று இயற்றப்பட்டவையாகவும் இருக்கலாம்.
- படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
- தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம்,
நையாண்டி எனப் பலசுவைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக
இருக்கலாம்.
- தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
- தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக திட்டப்
பொறுப்பாளருக்கு<amachu at au-kbc.org>அனுப்பிவைக்கவும்.
- தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் தாங்கள்
பங்களிக்கலாம்.
- ஐயங்களிருப்பின் திட்டப் பொறுப்பாளருக்கு <amachu at au-kbc.org>மடலியற்றவும்.
விண்ணப்பங்கள்
- தொழில்நுட்பத்தை அறிய விழையும் எளிய மக்களுக்காக மேற்கொள்ளப்படும்
சிறிய முயற்சியாகும் இது.
- இதில பங்களிக்க தாங்கள் அதிநுட்ப ஆற்றல் வாய்ந்தவராக இருக்க வேண்டும்
என்ற கட்டாயமில்லை.
- தங்களுக்கு தெரிந்த விடயத்தை இயன்ற எளிய முறையில் எடுத்துரைக்க ஆர்வம்
இருப்பின் போதுமானது.
- இதன் வளர்ச்சி நம் ஒவ்வொருவரின் கையிலுமே உள்ளது.
- குறைகளிலிருப்பின் முறையாக தெரியப்படுத்தி முன்னேற்றத்திற்கு தோள்
கொடுக்கவும்.
முதல் இதழ் வரும் சித்திரையிலிருந்து துவங்கும். தங்கள் படைப்புகளை ஒரு வார
காலத்திற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இணையதளம்: http://kanimozhi.org.in
தற்காலிக மடலாடற் குழு: http://groups.google.com/group/kanimozhi-aakkam
--
அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080402/8b43ff23/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list